அதிகரிக்கும் கொரோனா ! “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்”- மு.க.ஸ்டாலின்

கொரொனோ 2வது அலை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்” என்று தமது கட்சி உடன்பிறப்புகளுக்கு தி.மு.க.தலைவர்.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரொனோ பரவல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,”தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் அனைத்து நேரத்திலும் மக்களுடன் இணைந்துள்ள இயக்கம்தான்  திராவிட முன்னேற்ற கழகம்.கடந்த ஆண்டு இதே கொரொனோ பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிட ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவு,மருத்துவ வசதி  போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கழக தொண்டர்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் கொடுத்து உதவினார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

அதேபோல தற்போது உள்ள சூழலிலும் மக்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனது அறிக்கையின் மூலமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் கபசுர குடிநீர்,முகக் கவசம்,சானிடைசர்,மற்றும் நீர்மோர் போன்றவற்றை தேவைப்படும் இடங்களில் மக்களுக்கு வழங்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அதுவரை காத்திருக்காமல் இப்பொது இருந்தே மக்களுக்கு உதவ வேண்டும் என்று ‘மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே’ என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார்.

#BigNews: சென்னை மெரினாவில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி

MK Stalin

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்தினர்.

தேர்தலுக்கான பரப்புரை தொடங்கிய பொழுதும் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட முன்பும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு தான் தொடங்கினார்.

 

 

#BREAKING: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஸ்டாலின்..!

திமுக தலைவர் முக ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? – மு.க.ஸ்டாலின் டீவீட்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான , மருத்துவ கல்லூரி  சேர்க்கையில் 7.5% இடஒதுக்கீட்டு  மசோதாவை கடந்த மாதம் 15 ம் தேதி தமிழக அரசு சட்டபேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றியது .அதன் பின்பு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆனால் ஆளுநரோ இன்றுவரை இந்த மசோதா மீது எந்த முடிவும் எடுக்கவில்லை .

இந்நிலையில் தமிழக அரசு அரசியலமைப்பு சட்டம் 162 பிரிவை பயன்படுத்தி ஆளுநரின் அனுமதியில்லாமல் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடுக்கான  அரசானையை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது. இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது ? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் .

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை.!

பெரியாரின் 142 பிறந்த நாளை முன்னிட்டு அவரது, சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈ.வெ. ராமசாமி இவர் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவது, சாதி வேற்றுமைகளை அகற்றுவது உள்ளிட்டவற்றிக்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர் ஆவார். இன்று இவரது 142 பிறந்த நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17. சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம் சுயமரியாதைச் சுடர் வெல்க என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமராஜர் ஆட்சியில் 1954-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பிறகு மக்களவை காங்கிரஸ் உறுப்பினராகவும் பணியாற்றிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா திரு. எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் பிறந்தநாள் இன்று. அய்யா அவர்கள் 1952 முதல் திமுகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். வன்னிய சமுதாயப் பெருமக்கள் அய்யாவுக்கு சிலை வைக்க சென்னையில் இடம் கோரிய போது, “இடம் மாத்திரமல்ல; சிலையும் அரசின் சார்பிலேயே நிறுவப்படும்’ என்று வெண்கலச் சிலையை 1996-இல் கிண்டியில் அமைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்

இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினேன்.மேலும், 1969-ல் ஏ.என். சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இருந்த 25% இட ஒதுக்கீட்டை 1971-ல் 31% உயர்த்தியதும், பிறகு வன்னியர் மக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஏதும் இல்லாமலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுகதான். அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் பணிகளை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறேன் அவர் புகழ் நீடுழி வாழ்க என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அறிவிக்கப்படாத முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்.! ஈ.பி.எஸ் செய்கிறார்.! – உதயநிதி டிவீட்.!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார். அதனை தமிழக முதல்வர் செய்கிறார்.! – உதயநிதி ஸ்டாலின் டீவீட்.

தமிழகத்தில் நேற்று ஊரடங்கு தளர்வு நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டது. அதில் மாவட்டத்திற்குள் பொதுப் போக்குவரத்தான பேருந்துகளை இயக்குவது, இ-பாஸ் தமிழகத்திற்குள் செல்ல தேவையில்லை என்பது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், ‘ தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட  பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் ( மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.’ என தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவில் ஆற்றில் உயிரிழந்த 4 தமிழக மாணவர்கள்.! இரங்கலைத் தெரிவித்த முக ஸ்டாலின்.!

ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 தமிழக மாணவர்களின் குடும்பத்திற்கு முக ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்துள்ளது. இறந்த 4 பேரின் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு முக. ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் ரஷ்யாவில் வோல்கா ஆற்றில் தமிழக மாணவர்கள் 4 பேர் இறந்ததை அறிந்து மனம் உடைந்தது என்றும், மகன்களை இழந்த குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கடினமான நேரத்தில் அந்த குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இந்திய வெளியுறவு அமைச்சரான எஸ். ஜெயசங்கரிடம் கேட்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருமையில் நீதிபதிக்கே மிரட்டல்!என்ன நடக்குது? ஆள்வது யார்?

நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்களே!  என்ன நடக்கிறது? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாத்தன் குளத்தில் வியாபரிகளான தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய காவல் ஆய்வாளரும் அங்கு நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிதாக  சாத்தான்குளம் காவலர் மகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மேலும்  தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்ட தகவல் வெளியானது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிள்ளதாவது: சாத்தான்குளம் கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை.! – அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.!

பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.

இந்திய – சீன எல்லை பகுதிகளின் ஒன்றான, லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்களும், சீன ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இதனால், லடாக் எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அதில் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை கூறியுள்ளார். நம் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கிறது. ஆனால், நாட்டுபற்று என வந்தால் நாம் ஒருதாய் பிள்ளையாகவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். 1962 ஆம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பவர் முதன்முதலாக நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தார். தற்போது, ராணுவ வீரர் பழனி தனது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். நாட்டை பாதுகாக்க வேண்டுமென்றால் திமுகவும் தமிழக மக்களும் முதலில் வருவார்கள்.

முந்தைய போர்களின் போது ஜவர்கலால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் என பிரதமர்களின் கரங்களை திமுக வலுபடுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இந்தியா தனது ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும். இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. அதே நேரத்தில் பதிலடி கொடுக்கவும் இந்தியா தயங்காது. என பிரதமர் பேசியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது.

நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் காக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக உறுதியுடன் துணை நிற்கும். போர் வரும்போது பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டுவோம். என தனது கருத்துக்களை அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.