#BREAKING : மாநிலங்களவையில் கனிமொழி உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட்..!

suspended

5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்து துணை சபாநாயகர் நடவடிக்கை. 

விலைவாசி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் கோரி தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் இருந்து, 5 திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, துணை சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி சோமு, எம் சண்முகம், என்ஆர் இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உட்பட 11 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று ஏற்கனவே 4 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது – அண்ணாமலை

கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? என அண்ணாமலை ட்வீட். 

திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மௌனத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களது இயலாமையை ஒரு சமுதாயத்தினரின் தலையில் இறக்கி வைத்துள்ளனர்.

தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது?

இதில் சில கட்சிகள் சமூக நீதியை பின்னுக்குத் தள்ளி, அரசுக்கு அளித்த ரகசியத் தகவலை ஊடகத்திற்குக் கசிய விட்டதை முதன்மை குற்றச்சாட்டாக வைத்துள்ளனர். தமிழக உளவுத்துறையின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே!

மேடையில் முற்போக்குத்தனமாகப் பேசுவதும் நிஜ வாழ்வில் பிற்போக்குத்தனமாக இருப்பதும் திமுக அரசுக்கு ஒன்றும் புதிதல்ல. திமுக ஆட்சியில் கலவரங்களும் புதிதல்ல இப்படி கலவரங்கள் முடிந்த பின் அதற்குப் பட்டியலின மக்களை வஞ்சிப்பதும் புதிதல்ல. மீண்டும் ஒரு முறை ஒரு திறனற்ற அரசின் எடுத்துக்காட்டாக திமுக அரசு விளங்கியுள்ளது.’ என பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – டி.ஆர் பாலு கண்டனம்

காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கண்டனம்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று தொடங்கிய மக்களவையில் அதே சூழல் ஏற்பட்டது.

எதிர்க்கட்சியினர் பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது என தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டிஎன் பிரதாபன் ஆகிய 4 மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள், இந்த கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4  காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக எம்பி டி.ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. எம்பிக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது நடைமுறையில் இல்லாத ஒன்று.

மேலும், காங்கிரஸ் எம்பி-க்கள் இடைநீக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் பரிந்துரையின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். ஜனநாயகத்திற்கு ஆபத்தான ஒன்று இந்த இடை நீக்கம், இது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார்.

ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, ஓபிஎஸ் ஆட்களை நியமிக்கிறார் – ஜெயக்குமார்

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தலைமையில் நடைபெறும் முதல் போராட்டம் என்பதால், இதுதொடர்பாக சென்னை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சென்னை மாநகரம் இதுவரை பார்த்திடாத அளவுக்கு இந்த போராட்டம் நடைபெறும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஈபிஎஸ் நேரம் கேட்டு ஒதுக்கப்படவில்லை என கூறுவது தவறானது. பிரதமர் சென்னை வரும்போது அதிமுக சார்பில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்துப் பேசுவார் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், ஊர்தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச் சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணமில்லை என்கிறது திமுக. விளம்பரம் மற்றும் கருணாநிதி புகழுக்காக மட்டுமே கோடி கோடியாக செலவு செய்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசு ஏன் குறைக்கவில்லை? என்றும் கேர்ள்வி எழுப்பினார். மேலும், ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் என்றும் விமர்சித்தார்.

திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான் – செல்லூர் ராஜூ

இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம் என செல்லூர் ராஜூ பேட்டி.

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட செயளாலர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுகவிற்கு சரியான எதிரி அதிமுகதான். திமுகவிற்கு அடுத்து நாங்கள்தான் என கூறுபவர்களுக்கு இந்த ஆர்பாட்டம் ஒரு பாடம்.

இது காசுக்காக அழைத்துவரப்பட்ட கூட்டமல்ல, தானா சேர்ந்த கூட்டம். அதிமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திய விசிக, சிபிஎம் கட்சிகள் தற்போது ஆளையே காணவில்லை. அவர்கள் வாயை திறப்பதே இல்லை. வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டு உள்ளார்கள் என்றும் விமர்சித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் – நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

cmmkstalin

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார். 

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசால் இலவச சைக்கிள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் ஆண்கள்  பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். முதல்கட்டமாக 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.

இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும்! – பீட்டர் அல்போன்ஸ்

ஒருவர் கூட தமிழர் இல்லை.. இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘₹2.4 லட்சம் கோடி, அரசு வங்கிகளில் கடன் வாங்கி, ஆட்டையைப்போட்டு மோசடி செய்த 16 முக்கிய குற்றவாளிகள் பட்டியலை இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.. இதில் கவனிக்க வேண்டிய செய்தி.. ஒருவர் கூட தமிழர் இல்லை.. இதுதான் “திராவிடம்” சனாதனம் பேசுபவர்கள் அறிய வேண்டும்!, என பதிவிட்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு..!

குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ள அழைப்பு. 

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள  உள்ளனர்.

இந்த நிலையில், 15-வது குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு அவர்களை, தி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி-க்கள் குழு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

#BREAKING : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் அமைச்சர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள்..? – சசிகலா

Sasikala

திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து சசிகலா அறிக்கை.

உணவுப்பொருட்கள் மீது 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் தயிர், மோர், லஸ்ஸி, நெய் உள்ளிட்டவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. தற்போது இருந்து வரும் விலையைவிட சற்று அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சசிகலா அவர்கள் திமுக அரசு ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்ப பெறுமாறு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது, ஒவ்வொரு நாளும் திமுக அரசு தாங்கமுடியாத சுமைகளை தமிழக மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கிறது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

திமுக அரசு கடந்த மார்ச் மாதம் தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியிருந்தது. அதாவது, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40 ரூபாய், பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6 ரூபாய் என்ற அளவுக்கு கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நெய் விட்டருக்கு 45 ரூபாய். தயிர் லிட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 முதல் 3 ரூபாய் வரையிலும் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசே உதவுவதாக அமைந்துவிடும். இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது; அதேபோன்று மத்திய அரசும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.