1901 ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார்-பட்டம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர் வை.மு.கோதைநாயகி. கோதைக்கு ஒரு வயது இருக்கும் போது தன்னுடைய தாயை இழந்துவிட்டார். பாட்டி வேதவல்லியம்மாளிடமும் சித்தி கனகம்மாளிடமும் வளர்ந்தார். சிறு வயது முதலே தன் சித்தப்பா திருத்தேரி ராகவாச்சாரியாரிடம் நாலடியார், தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி முதலிய பல தமிழ் இலக்கியங்களைக் கற்றார். அக்காலத்தில் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்ததில்லை. கோதையும் பள்ளி செல்லவில்லை. […]