கோவை அருகே பேன்சி கடையில் தீ விபத்து – ரூ. 4 லட்சம் சேதம்..!

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள அப்புலு பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (42). இவர் அப்பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்து முருசேகன் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் பேன்சி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார்.

கடை கதவை திறந்து உள்ளே சென்று பொருட்களை எடுக்க முயன்றார். ஆனால் மின் கசிவு ஏற்பட்டதால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

இதனை தொடர்ந்து கவுண்டம் பாளையத்தில் உள்ள வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னரே தீயை அணைக்க முடிந்தது. நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியில் இன்று அதிகாலை மழை பெய்தது. ஆனாலும் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே தீயை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. முருகேசன் தனது கடையில் பேன்சி பொருட்கள் மட்டுமின்றி பாடப் புத்தகங்கள், பென்சில், பேனா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்து வந்தார். கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கு வைக்கப்பட்டு இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது கடைக்கு தீ வைத்தார்களா? என்பது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.