ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: அமலாக்கத்துறையிடம் மீண்டும் ஆஜரானார் ப.சிதம்பரம்..!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் கைது செய்யப்படும் சூழல் உருவான நிலையில், கைது செய்வதில் இருந்து தடை விதிக்ககோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரது கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 10-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து ப.சிதம்பரத்தை விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன்படி, ஜூன் 5-ம் தேதி ப.சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பலகட்டங்களாக நடைபெற்ற அந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் வரை நடைபெற்றது.

இதையடுத்து இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இன்று நடைபெறும் விசாரணையின்போது சிதம்பரம் அளிக்கும் வாக்குமூலத்தை பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, சற்றே மாறுபட்ட கோணத்தில் ப.சிதம்பரத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது.