அ.ம.மு.க. வட்டச் செயலாளர் வெட்டிக் கொலை..!

மதுரையில் பட்டப்பகலில் அ.ம.மு.க. வட்டச் செயலாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். காமராஜர் புரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர், வாழைத்தோப்பில் உள்ள மீனாட்சி பண்டக சாலை என்ற ரேசன் கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் அமமுகவின் வட்டச் செயலாளராகவும் உள்ளார். இன்று காலை வழக்கம் போல் ரேசன் கடையை திறந்து பணி செய்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனங்களில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், முனியசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து மாநகர காவல்துறை இணை ஆணையர் சசிமோகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். எதற்காக கொலை நடந்தது? கொலையாளிகள் யார்? என தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.