இந்த முதலமைச்சருக்கு எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி தெரியாதா? – ஈபிஎஸ்

“நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்” என்ற ஒரு பழம்பெரும் திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் இந்த விடியா அரசின் முதலமைச்சருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என ஈபிஎஸ் அறிக்கை. 

கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் விடியா அரசின் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல்தான் காவல் துறைத் தலைவர் ஆப்பரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன ? காவல் துறைத் தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான், இந்த முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

“நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்” என்ற ஒரு பழம்பெரும் திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் இந்த விடியா அரசின் முதலமைச்சருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் போலும். ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு, அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என்று பொம்மலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் போடும் இரட்டை வேடத்தால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களினால் இளைஞர் சமுதாயம் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும் தான். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா வியாபாரிகள் சிறு சிறு பொட்டலங்களாக விற்பது கண்கூடான ஒன்றாகும்.

காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன ஜி பூம்பா தலையா? இந்த முதலமைச்சருக்கு எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி தெரியாதா? கஞ்சா கடத்தலுக்கு மூலக் காரணம் யார் ? யாரைப் பிடித்தால் இது குறையும் என்று தெரியாதா ?

புதிது புதிதாக போதைப் பொருள் வியாபாரிகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகுகிறார்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இந்த அரசு ஒத்துக்கொள்கிறதா? நடனமாடத் தெரியாத ஒருவர், “கூடம் கோணல்” என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

மேலும் நான் ‘சாப்ட்’ முதலமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும், வசனம் பேசுவதை நிறுத்திவிட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க, ஆக்கப்பூர்வமான வழிமுறைகளைக் கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க, காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர், காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளின்படி தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றிய வி.கே.சசிகலா..!

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை  ஏற்றியுள்ளார். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி  இருந்தார்.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க வி.கே.சசிகலா தனது இல்லத்தில் தேசிய கொடியை  ஏற்றியுள்ளார்.

அந்த சம்பவத்தால் திராவிடர்கள் அனைவருக்கும் தலைகுனிவு.! சசிகலா கண்டனம்.!

மின் ஊழியர் ஒருவர், புகார் கொடுக்க வந்த நபரை மின் மோட்டார் கொண்டு தாக்க முயன்ற சம்பவத்திற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 

காலை முதல் இணையத்தில் தமிழக அளவில் மிகவும் வைரலாக  பார்க்கப்பட்ட வீடியோ என்றால்,  அது தர்மபுரி மாவட்ட பாலக்காடு பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டதை பற்றி புகார் கொடுக்க ஒரு பெண் வந்துள்ளார்.

அந்த பெண்ணை, மின் ஊழியர் குப்புராஜ் என்பவர் மின் மோட்டாரை கொண்டு தாக்க முயற்சித்த வீடியோ தான். அதன் பின் உடனடி நடவடிக்கையாக அந்த மின் ஊழியரை சஸ்பெண்ட் செய்து மின் வாரியம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். திராவிட ஆட்சியில், இப்படி ஒரு சம்பவம் நடப்பது, திராவிடர்களாகிய நமக்கு பெரும் தலைகுனிவு. இது போன்ற அவலநிலைகளை அதிமுக ஆட்சியில் பார்க்க முடிந்ததா? என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

#BREAKING : அதிமுக பொதுக்குழு வழக்கு – விசாரணை தொடங்கியது..!

highcourt

பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம். 

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர், கடந்த ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில்  நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த நிலையில், பொதுக்குழு விதிகளை பின்பற்றி   நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்த வாதங்களை முன்வைக்குமாறு ஓபிஎஸ் தரத்திற்கு நீதிபதி  அறிவுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில், ஜெயலலிதா நிரந்தர பொது செயலாளர் ஆக நீடிப்பார் என 2017 பொது குழுவில் முடிவு செய்யப்பட்டது. 2017 பொது குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்ந்தெடுக்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்றும், பொது செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை திருத்த முடியாது என்றும், பொதுச் செயலாளராக மீண்டும் ஒருவரை அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டுள்ளது.

அதிமுக பிளவுக்கு திமுக தான் காரணம் – சசிகலா

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம் என சசிகலா பேட்டி. 

அதிமுகவில் மிகப்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் ஒரு பிரிவாகவும், ஈபிஎஸ் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்ற்னர்.

இந்த நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சசிகலாவிடம், பாஜகவின் அழுத்தம் தான் அதிமுகவின் பிளவிற்கு காரணமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன்; இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கருதுகிறேன். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக தான் காரணம். திமுக தான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அதிமுகவின் பிளவுக்கு மத்திய அரசு காரண இல்லை என தெரிவித்துள்ளார்.

வருங்காலத்தில் ஓபிஎஸ்-உடன் இணைய வாய்ப்புள்ளது -டிடிவி தினகரன்

வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது என டிடிவி தினகரன் பேட்டி. 

அதிமுகவில் தற்போது மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக பிரிந்து உள்ளனர்.

இந்த நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன், வரும் காலத்தில் ஓ.பி.எஸ் உடன் கை கோர்க்க வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. ஊடகங்களுக்கு தான் பா.ஜ.க எதிர்க்கட்சி. நிஜத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தான் எதிர்க்கட்சி. எங்களை மதிக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள் என தெரிவித்துள்ளார். 

மாயத்தேவர் மரணம் – சசிகலா இரங்கல் தெரிவித்து ட்வீட்..!

அதிமுகவின் முதல் எம்.பி மாயத்தேவர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சசிகலா ட்வீட். 

1972ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து பிரிந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினை ஆரம்பித்தார்.

அதன் பின்னர் நடந்த 1977ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுகவின் முதல் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர் மாயத்தேவர்.

இவர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சசிகலா அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், கழக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.K. மாயத்தேவர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரமடைந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் அவர்கள் உருவாக்கியபின் முதன் முதலாக கழகத்தின் சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று புரட்சித்தலைவருக்கு பெருமை சேர்த்தவர்.

திரு.K.மாயத்தேவர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு, புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களான கழக தொண்டர்களின் சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து. 

காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் 72 நாடுகளுக்கு இடையிலான காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய நாட்டின் சார்பில் போட்டியிட்டு, பதக்கங்களை வென்று, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நெஞ்சம் காமன்வெல்த் விளையாட்டுகளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத்கமல்-சத்யன் இணைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அனைவரும் மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களைப் பெற்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது நல்வாழ்த்துகள்.’ என தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் – ஓபிஎஸ்

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பத் தேதியை நீட்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வேண்டுகோள்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆண்டுதோறும் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04-07-2022 காலை 10-00 மணி முதல் 09-07-2022 மாலை 5-00 மணி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவியருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்தப் பயிற்சியில் சேர ஏராளமான கிராமப்புற மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் இணையதளம் வழியாக விண்ணப்பித்தனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான மாணவ, மாணவியர் விண்ணப்பிக்காத சூழ்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 13-07-2022 வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிப்பிற்குப் பிறகும், பெரும்பாலான இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டதாகவும், இதற்குக் காரணம், பிணைய இணைப்பு அதாவது Network Connection சரியாக இல்லாததுதான் என்றும், மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிக்கும்பட்சத்தில் அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்க ஏதுவாக இருக்குமென்றும் இந்தப் பயிற்சியை ஆர்வமுடன் பயில உள்ள மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நியாயமான கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டிய கடமை தமிழக அரசாங்கத்திற்கு உள்ளது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்படி கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருத்தில் கொண்டு, ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் அளிக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப்போக்கோடு இருந்து வரும் திமுக அரசு..! – ஈபிஎஸ்

இந்திய வானிலை மையம் “ரெட் அலர்ட்” கொடுத்த பின்பும் மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியப் போக்கோடு இருந்ததாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை. 

கடல் சீற்றம்,கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்குமென இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த திமுக அரசு மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை தகவலை அளிக்கவில்லை என கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த பின்பும் இந்த விடியா அரசு, மீனவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை தகவலை அறிவிக்காத காரணத்தினால், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில், அதில் இருந்த 4 மீனவர்களில் 2 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.

அவர்களைத் தேடுவதற்கான எந்த முயற்சியையும் இந்த விடியா திமுக அரசு மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மீன்வளத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே நடைபெற்ற இந்த அவலம் மீனவர்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் சுமார் 15 விசைப் படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை என்ற தகவல் இம்மாவட்ட மீனவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. விடியா அரசின் இந்த மெத்தனப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், விடியா திமுக அரசும், மீன்வளத் துறையும், இனியாவது தூக்கத்தில் இருந்து விழித்து, மீட்பு நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டு அனைவரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளனர்.