SRH vs RCB: சதமடித்த கிளாஸன்…RCB அணிக்கு வெற்றி பெற 187 ரன்கள் இலக்கு.!

ஐபிஎல் தொடரின் இன்றைய SRH vs RCB போட்டியில் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 186/5 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா(11 ரன்கள்) மற்றும் ராகுல் திரிபாதி(15 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதையடுத்து கேப்டன் மார்க்ரமுடன் இணைந்து கிளாஸன் அதிரடி காட்டினார்.

இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர், கேப்டன் மார்க்ரம் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க கிளாஸன் அரைசதம் கடந்தார். இதையடுத்து ஹாரி ப்ரூக்- கிளாஸன் ஜோடி பந்துகளை பவுண்டரி மற்றும்  சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிளாஸன் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 49 பந்துகளில் அடித்து அசத்தினார்.

முடிவில் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளாஸன் 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 104 ரன்களும், ஹாரி ப்ரூக் 27* ரன்களும் குவித்தனர். பெங்களூரு அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

author avatar
Muthu Kumar