WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?
இந்திய மகளிர் அணி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் இந்திய மகளிர் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி, நியூஸிலாந்து மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அதில், இந்திய மகளிர் அணி 58 ரன்கள் என்ற பெரிய ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். இந்த தோல்வியின் மூலம் இந்திய மகளிர் அணியின் அரை இறுதி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தத் உலகக் கோப்பைத் தொடரில், 10 நாடுகள் பங்கேற்று விளையாடிவருகிறது.
இந்த 10 அணிகளையும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் ஒரு அணி மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும் எனவும், இறுதியில் புள்ளிப்பட்டியலில் இடம் பெறும் முதல் 2 அணிகளும் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள் என்பது தான் ஐசிசியின் விதியாகும்.
அதன்படி, பார்க்கையில் ஒரு அணிக்கு குரூப் பிரிவில் 4 போட்டிகள் நடைபெறும். அதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பு என்பது ஜொலித்து விடும். இப்படி இருக்கையில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்துள்ளதால், அடுத்ததாக நடைபெற இருக்கும் 3 போட்டிகளையும் இந்திய மகளிர் அணி வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.
அதிலும், முதல் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதால் ரன் ரேட்டிலும் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் என்பது ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்ததடுத்து நடைபெறும் போட்டிகளில் இந்திய மகளிர் அணி அதிக ரன்கள் விதியாசத்திலே வெற்றி பெற வேண்டும்.
ஆனால், ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகள் இருப்பதால் இந்திய மகளிர் அணிக்கு அடுத்தடுத்த போட்டிகள் சவாலாகவே இருக்கும். இதனால், வரக்கூடிய போட்டிகளில் எப்படி இந்த சவால்களை சமாளித்து அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்க போவார்கள் என்பதனை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.