WWT20 : ‘இனிமேல் இப்படி செய்தால் அவ்வளவு தான்’! இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு ஐசிசி கண்டனம்!
மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடைபெற்ற 7-வது போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி.
துபாய் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. முன்னதாக நடைபெற்ற நியூஸிலாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டது. அதிலும், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் போது முதலில் பந்து வீச்சில் ஈடுபட்ட இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய வீராங்கனையான அருந்ததி ரெட்டி 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார்.
இந்த போட்டியில் இவர் பாகிஸ்தான் வீராங்கனையான நிதா தரை போல்டாக்கி விக்கெட்டை எடுத்திருப்பார். அந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக ஆக்ரோஷமாக ‘வெளிய போ’ என்று அருந்ததி சைகை செய்திருப்பார். இந்த செயல் ஐசிசியின், நடத்தை விதியை மீறியதால் அருந்ததி ரெட்டிக்கு வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும், அருந்ததி ரெட்டிக்கு 1 தகுதி இழப்பு புள்ளியையும் அளித்துள்ளது, ஐசிசி. இதனால், இதே போல மேலும் போட்டியில் ஈடுபட்டால் இந்த புள்ளி எகுறுவதற்கு வாய்ப்புகள் உண்டு, ஒரு வேளை இது 4 புள்ளிகளை எட்டினால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.