WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!
நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பையில், இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி எளிதில் வெற்றி பெற்றது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங்கில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தாமல் தட்டி தட்டியே ரன்களைச் சேர்த்தனர். மைதானம் பெரிது என்பதாலும், மேலும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பந்து வீச்சும் சவாலாக அமைந்ததாலும் ஸ்காட்லாந்து மகளிர் அணியால் அதிக ஸ்கோரை, ஸ்கோர் போர்டில் அமைக்க முடியவில்லை.
இதன் காரணமாக 20 ஓவர்களும் பேட்டிங் பிடித்த ஸ்காட்லாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்காட்லாந்து மகளிர் அணியில் அதிகபட்சமாக அலிசா லிஸ்ட்டர் 26 ரன்களும், பிரைஸ் 25 ரன்களும் எடுத்திருந்தனர்.
மறுமனையில் சிறப்பாக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் அஃபி பிளெட்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது.
ஆனால் ஸ்காட்லாந்து அணியைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் தொடக்கம் சரியாக அமையவில்லை இதன் காரணமாக தொடக்க வீராங்கனைகளின் இருவரின் விக்கெட்டுகளையும் பவர்பிளே முடிவதற்குள் அடுத்தடுத்து இழந்தது.
அதன் பின் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கியானா ஜோசப் அதிரடியாக விளையாடினார். மேலும், மறுமுனையில் டியான்ட்ரா டாட்டின் அவருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். மேற்கொண்டு, அதிரடியாக விளையாடிய கியானா ஜோசப் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எந்த ஒரு விக்கெட்டும் போகவில்லை. இதனால், 11.4 ஓவரில் 4 விக்கெட் இழந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 101 ரன்கள் எடுத்து போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால், இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி நடைபெற்று வரும் இந்த டி20 மகளிர் உலக கோப்பையில் 1 தோல்வி, 1 வெற்றியும் பெற்று, குரூப் B பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.