WWT20 : விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதில் கொடுத்த பாகிஸ்தான் வீராங்கனை!
பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்களுக்கு விளையாட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
ஷார்ஜா : மகளிர் உலகக்கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா மீது ஒருவர் அவருடைய கேப்டன்சி பற்றி விமர்சித்துப் பேசியிருந்தார்.
அவர் வேறு யாரும் இல்லை, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரும், பாகிஸ்தான் வீராங்கனை அலியா ரியாஸின் கணவருமான அலி யூனிஸ் தான். இவர், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய போட்டியின் போது, கேப்டன் பாத்திமா சனாவின் கேப்டன்சி சரியாக இல்லை. அவர் இந்த வேலையைச் செய்யச் சரியானவர் இல்லை என விமர்சித்துப் பேசியிருந்தார்.
எனவே, இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய விளையாட்டின் மூலம் பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், எதிர்பார்த்ததை போலவே சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்று இருக்கிறார். நேற்று இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி பேட்டிங்கில் 30 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
அதைப்போல, பந்துவீச்சில் அருமையாகப் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங், பந்துவீச்சை மிஞ்சும் அளவுக்குத் தேவையான நேரத்தில்,யாரை பௌலிங் செய்ய வைக்கலாம் எனத் திட்டமிட்டு அவர்களைப் பந்துவீச வைத்துச் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன் காரணமாகத் தான் பாகிஸ்தான் அணியினாலும் இந்த போட்டியை வெல்ல முடிந்தது.
Read More –அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
முன்னதாக, அவருடைய கேப்டன்சி பற்றி விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு தன்னுடைய விளையாட்டின் மூலம் பதிலடி கொடுத்துவிட்டார். அதே சமயம், அவரை விமர்சித்த அலி யூனிஸ் மனைவி அலியா ரியாஸ் இந்த போட்டியில் விளையாடி இருந்தார்.ஆனால், 1 ரன்கூட அடிக்க முடியாமல் டக்-அவுட் ஆகினார். எனவே,பாத்திமா சனாவை விமர்சித்தது போல அலியா ரியாஸை நீங்கள் விமர்சிப்பீர்களா? என அலி யூனிஸிடம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.