மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சிறை அதிகாரிகள் அளித்த அனுமதி !
சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார், தனது வார்டில் உள்ள டிவி மூலம் ஒலிம்பிக் போட்டிகளை காண திகார் சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகே உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் இந்திய ஜூனியர் மல்யுத்த வீரர் சாகர் ராணா தங்கியிருந்தார்.அதன் உரிமையாளராக இருப்பவர் சுஷில் குமாரின் மனைவி என்று தகவல் வெளியாகின.இதனால்,நண்பர்களோடு தங்கியிருந்த சாகர் ராணாவுக்கும், சுஷில் குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால்,சாகர் ராணா தங்கியிருந்த வீட்டை காலி செய்யுமாறு சுஷில் குமார் வற்புறுத்தியதாகவும், ஆனால், சாகர் ராணாவும் அவரது நண்பர்களும் வீட்டைவிட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து தன் நண்பர்களுடன் இணைந்து, சாகர் ராணாவையும் அவரது நண்பர்களையும் வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு சுஷில் குமார் வெளியேற்றினார்.
சாகர் ராணா மரணம்:
இதனையடுத்து,டெல்லியில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சாகர் ராணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் காயமடைந்த சாகர் ராணா உயிரிழந்தார்.
ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்:
இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மல்யுத்த வீரர் சுஷில் குமாரும் அவரது நண்பர்களும் தலைமறைவாகினர்.இதனால்,சுஷில் குமார் வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதால் முன்னதாக விமான நிலையங்களுக்கு டெல்லி காவல் நிலையத்தில் இருந்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இருப்பினும் சுசில்குமார் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவர் இருப்பிடம் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என டெல்லி போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய மற்றொரு நபரான அஜய் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கைது:
இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரையும்,அவரது நண்பரையும் மே 23 ஆம் தேதியன்று கைது செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் குமாரின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தது. பின்னர்,டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு அனுப்பினர்.
அத்தியாவசிய தேவை அல்ல:
சிறையில் சிறப்பு உணவு, சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள் கோரி சுஷில் குமார்,ரோஹினி நீதிமன்றத்தை நாடினார், அவரது உடல்நலம் மற்றும் செயல்திறனைப் பராமரிக்க இவை மிகவும் அவசியமானவை என்று வலியுறுத்தினார்.ஆனால்,சுஷில் குமார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை கடந்த மாதம் டெல்லி நீதிமன்றம் “அவை அத்தியாவசிய தேவை அல்ல” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
டோக்கியோ ஒலிம்பிக்:
இதற்கிடையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
சிறை அதிகாரிகளுக்கு கடிதம்:
இதனையடுத்து,சுஷில் குமார் சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:”எனக்கு டிவி கிடைத்தால், மல்யுத்தம் மற்றும் பிற விளையாட்டு நிகழ்வுகள் குறித்த புதிய செய்திகள் கிடைக்கும் “,என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,நாளை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியைக் காண தனது வார்டின் பொதுவான பகுதியில் டிவி பார்க்க சுசில் குமாருக்கு,சிறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
மேலும்,இதுகுறித்து,டைரக்டர் ஜெனரல் (டெல்லி சிறைச்சாலை) சந்தீப் கோயல் கூறுகையில்,”சுஷில் குமார் தனது வார்டின் பொதுவான பகுதியில் மற்றவர்களுடன் சேர்ந்து டிவி பார்க்க அனுமதித்துள்ளோம்”,என்று கூறினார்.
சுஷில் குமார் பெற்ற பதக்கங்கள்:
இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.அதனைத் தொடர்ந்து,2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதன் மூலம் சுதந்திரத்துக்குப் பின்னர், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றார்.
மேலும்,2010 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.அதுமட்டுமல்லாமல்,காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களும், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 தங்கப் பதக்கம் மற்றும்ஒரு வெண்கலம் உட்பட 6 பதக்கங்களை வென்று இந்தியாவின் சிறந்த மல்யுத்த நாயகனாக வலம்வந்தார்.
விருதுகள்:
2005 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அர்ஜுனா விருது,விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2009 ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.