உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.. பிரமாண்ட பரிசுத்தொகை விவரங்கள்… ஃபிஃபா அதிகாரபூர்வ அறிவிப்பு.!
2022 ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு எவ்வளவு பரிசுத் தொகை என ஃபிஃபா அறிவித்துள்ளது.
கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்தொடரான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், நாளை கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது.
4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், முதன்முறையாக அரபு நாடுகளில், கத்தாரில் நடைபெறுகிறது. உலகக் கோப்பைக்காக 32 அணிகள் பங்குபெறுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகையை ஃபிஃபா அமைப்பு அறிவித்துள்ளது.
2022 FIFA உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு $42 மில்லியன்(இந்திய மதிப்பில் 344 கோடி) பரிசுத் தொகை வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறும் அணிக்கு $30 மில்லியன்(இந்திய மதிப்பில் 245 கோடி) பரிசுத் தொகையும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு $27 மில்லியன்(இந்திய மதிப்பில் 220 கோடி) பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு $25 மில்லியன்(இந்திய மதிப்பில் 204 கோடி) பரிசுத் தொகையும் மேலும், ஐந்தாவது முதல் எட்டாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா $17 மில்லியன்(இந்திய மதிப்பில் 138 கோடி) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.