உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டி.! டை பிரேக்கர் சுற்று தொடக்கம்..!
உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அந்த போட்டியானது முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் முதல் சுற்றில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் வழங்கப்படும். இந்த சுற்றும் டிராவில் முடிந்தால் டை பிரேக்கரின் இரண்டாவது ஆட்டம் நடைபெறும்.
அதில் இருவருக்கும் பத்து நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் 5 வினாடிகள் தரப்படும். அதிலும் ஆட்டத்தின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் டை பிரேக்கரின் 3வது சுற்று நடைபெறும். அதற்கு பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவருக்கும் ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக மூன்று வினாடிகள் வழங்கப்படும்.