உலகக்கோப்பையில் கோல்டன் பூட், கோல்டன் பால் விருதுகள் யாருக்கு?
ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார்.
உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் மெஸ்ஸி, 7 கோல்கள் அடித்ததற்காகவும், மேலும் 3 முறை கோல் அடிக்க உதவியதற்காகவும் கோல்டன் பால் விருது வென்றுள்ளார்.
கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக இரண்டு கோல்டன் பால் விருது வென்று லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை படைத்துளளார். 2014இல் மெஸ்ஸி தனது முதல் கோல்டன் பால் விருது வென்றிருந்தார்.
அர்ஜென்டினாவின் 21 வயதான நடுகள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ், போட்டியின் சிறந்த இளம் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் கோல்டன் க்ளவ் விருதை வென்றுள்ளார்.