ஐபிஎல் 2025 தொடங்கும் தேதி இது தான்! பிசிசிஐ போட்ட பக்கா பிளான்!
2025, 2026 மற்றும் 2027க்கான ஐபிஎல் தேதிகளை பிசிசிஐ உறுதி செய்துள்ளதாக அதற்கான தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது. இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமும் நாளை நடைபெறவுள்ளது.
இந்த சூழலில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான தேதி விவரம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதன்படி, ஐபிஎல் 2025 போட்டியானது மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி 2025 மே 25-ஆம் தேதி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல், 2026 மற்றும் 2027 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் தேதி பற்றிய விவரங்களையும் பிசிசிஐ ஒரே அறிவிப்பாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, 2026 – ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 15 முதல் மே 31 வரையும் 2027 ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதைப்போல, 2026-ஆம் ஆண்டு 84 போட்டிகள் அதிகரிக்கப்படும் எனவும், 2027-ஆம் ஆண்டு வரலாற்றிலேயே அதிகமாக 94 போட்டிகளாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதிகளை பிசிசிஐ அறிவிக்க முடிவு செய்துள்ள முக்கியமான காரணமே போட்டிகள் மீது மக்களுக்கு அதிகமாக எதிர்பார்ப்புகள் எழுவதற்காக தான். அதற்காக தான் மாஸ்டர் பிளான் செய்து பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுவும், ஒரு தொழில் யுக்தியாக தான் பார்க்கப்படுகிறது.