“வாழ்நாள் முழுவதும் இலவச பீஸ்ஸா வழங்குகிறோம்” – டோமினோஸ் நிறுவனம்…!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்கு,வாழ்நாள் முழுவதும் இலவச பீஸ்ஸா வழங்குவதாக டோமினோஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில்,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி,நேற்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.

ஸ்னாட்ச், கிளீன் மற்றும் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் (87 கிலோ + 115 கிலோ) மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி  வரலாறு படைத்துள்ளார்.இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா வெள்ளியுடன் தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம்  வென்ற கர்னம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இரண்டாவது மற்றும் முதல் வெள்ளி பதக்கம் வென்ற  இந்திய பெண் பளுதூக்குபவராக மீராபாய் சானு சாதனை படைத்துள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து:

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சாணுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த்,பிரதமர் மோடி,தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கனவு நனவானது:

இதனையடுத்து,பதக்கம் வென்றது குறித்து மீராபாய் கூறியதாவது: “நிஜமாகவே எனது கனவு நனவானது.இந்த பதக்கத்தை எனது நாட்டுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்,இந்த பயணத்தின் போது என்னுடன் இருந்த அனைத்து இந்தியர்களின் லட்சக்கணக்கான பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.அரசு,பயிற்சியாளர் மற்றும் எனது குடும்பத்திற்கு குறிப்பாக எனக்காக நிறைய தியாகங்கள் செய்த மற்றும் என்னை நம்பிய  என் அம்மாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்”,என்று தெரிவித்தார்.

மேலும்,மீராபாய் சானு என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், இந்த வெற்றிக்கு பிறகு,தான் பீஸ்ஸா சாப்பிடுவதை முதலில் செய்ய விரும்பியதாக கூறினார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,”முதலில், நான் சென்று பீஸ்ஸா சாப்பிடுவேன். நான் அதை சாப்பிட்டு நீண்ட நாட்களாகிவிட்டன. நான் நிறைய சாப்பிடுவேன்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,டோமினோஸ் இந்தியா தனது பீஸ்ஸாக்களை மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக டோமினோஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,”மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள்,அவர் மீண்டும் பீஸ்ஸா சாப்பிடக் காத்திருப்பதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை, எனவே நாங்கள் டோமினோஸ் பீஸ்ஸாவை அவருக்கு வாழ்நாள் முழுவதும் தருகிறோம்”,என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்