WWT20 : ‘நாங்க சரியா விளையாடல’! தோல்வியை ஒத்துக்கொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன்!
நேற்று நியூசிலாந்து மகளிர் அணியுடன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என ஹர்மன் ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4-வது போட்டியாக நேற்று நியூசிலாந்து மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மிகச்சிறப்பாக விளையாடி 160 ரன்கள் எடுத்தது. அதிலும், அந்த மகளிர் அணியின் கேப்டனான டெவின் 57 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
மேலும் இந்த 160 ரன்கள் எட்டுவதற்கு மிக முக்கியக் காரணமாகவும் அவர் அமைந்திருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய இந்திய மகளிர் அணி வீராங்கனைகளின் தொடர் சொதப்பலால் ரன்களை எடுக்கத் தவறியது. இதனால், 19 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது. இந்த படுதோல்வியைத் தொடர்ந்து இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது சவாலாக மாறி இருக்கிறது. அதன் பின் இந்த போட்டி முடிந்த பிறகு இந்திய மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன் ப்ரீத் கவுர் பேட்டியளித்திருந்தார்.
அதில் பேசிய அவர் தோல்வியின் காரணத்தை விளக்கிக் கூறியதுடன் அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் எனவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், “இன்று நாங்கள் எங்களது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தவில்லை.
இந்த தொடரில் நாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது நாங்கள் இதனை சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இப்போது இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது, அதனை சரி செய்து சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் இனி எங்களது சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
எதிரணி எங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடினார்கள் என்பதில் சந்தேகமில்லை. பலமுறை 160-170 என சேஸ் செய்திருக்கிறோம். ஆனால் அந்த மைதானத்தில் ஒரு ஓவருக்கு 10 முதல் 15 ரன்கள் அதிகமாக எடுக்க தேவைப்பட்டது”, என ஹர்மன் ப்ரீத் கவுர் பேசி இருந்தார்.