பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்..! பிரதமர் மோடி வாழ்த்து.!
உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
இதன்பிறகு நடந்த இறுதிப் போட்டியில் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா மோதினார். அதில் இறுதிப் போட்டியின் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்தது. இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது.
இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி விறுவிறுப்பாக சென்ற நிலையில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார். பிறகு டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், “FIDE உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! அவர் தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தினார் மற்றும் இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான சண்டையை வழங்கினார். இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.
We are proud of Praggnanandhaa for his remarkable performance at the FIDE World Cup! He showcased his exceptional skills and gave a tough fight to the formidable Magnus Carlsen in the finals. This is no small feat. Wishing him the very best for his upcoming tournaments. pic.twitter.com/KXYcFRGYTO
— Narendra Modi (@narendramodi) August 24, 2023