விராட் கோலியின் தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம்-பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா..!

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் விராட் கோலியின் தனிப்பட்ட முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
டி-20 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்று கோலி அறிவித்துள்ளார். துபாயில் நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். டி 20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.
இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கோலி கேப்டனாக தொடர்ந்து அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு நெருக்கமானவர்கள், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு எடுக்கப்பட்டதாக கோலி கூறினார். நான் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை என் திறமையால் வழிநடத்தவும் அதிர்ஷ்டசாலி.
இந்திய கிரிக்கெட் அணிக்காக பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி. பணிச்சுமையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடந்த 8-9 ஆண்டுகளில் 3 வடிவ விளையாட்டுகளில் விளையாடுவதையும், கடந்த 5-6 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருப்பதையும் கருத்தில் கொண்டு ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என கோலி தெரிவித்துள்ளார். எம்.எஸ் தோனி தனது பதவியில் இருந்து விலகிய பிறகு 2017 ஆம் ஆண்டு கோலி கேப்டனாக பொறுப்பேற்றார். ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் கோலி இந்தியாவை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 ஐசிசி உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு கோலி அணியை வழிநடத்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக விராட் கோலி டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் விலக உள்ளதாகவும், பின்னர் ரோஹித் சர்மா இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார் என்றும் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட்கோலி அறிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளதாவது, இந்திய டி 20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. அதை ஒருபோதும் மறக்க முடியாது. இது அவரது தனிப்பட்ட முடிவு, நாங்கள் அதை மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Virat Kohli’s contribution to the Indian T20 cricket team as captain was immense. It can never be forgotten. This is his personal decision and we respect it. @imVkohli @BCCI https://t.co/JtGIcJBkom
— Rajeev Shukla (@ShuklaRajiv) September 16, 2021