விஜய் ஹசாரே டிராபி 2023: நிறைய ரத்தம், வாயில் பெரிய அடி.. வலியுடன் போராடிய பாபா இந்திரஜித்!

Baba Indrajith

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, ஹரியானா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 293 ரன்களை எடுத்தது. இதனால், 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது.

ஆனால், தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே அடித்து, தோல்வியை சந்தித்தது. இதில் குறிப்பாக, தமிழ்நாடு அணி சேஸிங் செய்தபோது, பாபா இந்திரஜித் போட்டியின் இடையே கீழே விழுந்ததால் அவரது முகத்திலும் வாயிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இருப்பினும், முக்கியமான போட்டி என்பதால் அணிக்காக விளையாடி ஆகவேண்டும் என்பதற்காக ரத்தம் வலிவதை தடுக்க, வாய் முழுவதும் பெரிய கட்டு ஒன்றை கட்டிக் கொண்டு (பேன்டஜ்) இந்திரஜித் பேட்டிங் செய்தார். அதன்படி, ஹரியானாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 71 பந்துகளை எதிர்கொண்ட இந்திரஜித் 64 ரன்களை அடித்திருந்தார்.

டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர்கள் தேர்வு.. இதுவே முதல்முறை!

மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், அணியின் வெற்றிக்காக காயத்துடன் இந்திரஜித் போராடினார். அவர் மட்டுமே அதிகபட்ச ரன்களை எட்டினார். இருப்பினும், தமிழக அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  இப்போட்டிக்கு பிறகு தனது காயம் குறித்து இந்திரஜித் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் அனைவரின் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி. போட்டி இடையே ஐஸ் பாத் எடுத்து முடிக்கும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டேன். இதனால் முகம் மற்றும் வாயில் பலத்த அடிபட்டிருந்தது. மேல் உதட்டிலும் ஆழமாக வெட்டியிருந்தது. ரத்தம் வலிந்தது. வாயின் உட்பகுதியிலும் அடிபட்டிருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு பேட்டிங் ஆடிவிட்டேன்.

ஆனாலும், அணி வெல்லாமல் போனதில் வருத்தம்தான். போட்டியை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றேன். தையல் போட்டிருக்கிறார்கள். விரைவில் மீண்டுவிடுவேன் என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். காயத்தையும் பொருட்படுத்தாமல் அணி வெற்றிக்காக களமிறங்கி போராடிய இந்திரஜித்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்