மாவோ பேட்ஜ் அணிந்து வருகை; தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைகளை எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் போது மாவோ சேதுங் பேட்ஜ்களை அணிந்த இரு சீன சைக்கிள் விளையாட்டு வீராங்கனைகளை,ஐஓசி எச்சரிக்கை விடுத்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில்,பல்வேறு போட்டிகள் நடைபெற்று இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையில்,ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறும் போது இரண்டு சீன சைக்கிள் விளையாட்டு வீராங்கனைகள் பாவ் ஷன்ஜு மற்றும் சோங் தியான்ஷி ஆகியோர் சீனாவின் முன்னாள் கம்யூனிச தலைவரான மாவோவின் உருவப்படம் இடம்பெற்ற பேட்ஜ்களை அணிந்து வந்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து,சீன ஒலிம்பிக் கமிட்டியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) எச்சரித்தது.
மேலும்,எந்தவொரு மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பிரசாரங்களை ஒலிம்பிக் அரங்கில் மேற்கொள்வதை ஏற்க முடியாது என சர்வதேச ஒலிம்பிக் சங்கம், தெரிவித்துள்ளது.
அதன்பின்னர்,இது மீண்டும் நடக்காது என்று சீன தரப்பு உறுதியளித்ததால் இந்த வழக்கு தற்போது முடிவடைந்தது என்று ஐஓசி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது.ஆனால் சீன விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் சாசனத்தை மீறினார்களா இல்லையா என்பதை ஐஓசி குறிப்பிடவில்லை.
சாண்டர்ஸின் ‘X’ அடையாளம்:
அதே போல,ஒலிம்பிக் ஷாட் புட்டில்(குண்டு எறிதல்) வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு அமெரிக்க தடகள வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் பதக்கம் பெறும்போது ஒலிம்பிக் மேடையில் தனது கைகளை அவர் தலைக்கு மேலே ஒரு X வடிவத்தில் உயர்த்தினார்.
பின்னர் அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் ஆதரவின் வெளிப்பாடு என்று விளக்கினார்.பின்னர், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டி (யுஎஸ்ஓபிசி) இந்த சைகை ஒலிம்பிக் விதிகளை மீறவில்லை,ஏனெனில் இது “இன மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக அமைதியான வெளிப்பாடு (அது) தனது போட்டியாளர்களை மதிக்கிறது என்று தெரிவித்தது.