முத்தரப்பு டி20 போட்டி: சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற ஆஸ்திரேலியா.! போராடி தோற்ற இந்தியா.!
- இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில், 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை மூனே, 54 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் டிபி சர்மாவும் கயாக்வாடும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீராங்கனை மந்தனா, 37 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து, 15-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வந்த இந்திய அணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தடுமாறியது. வேகமாக ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற நிலையில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெஸ் ஜொனாஸ்ஸென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.