1.5 கோடிக்கு ஏலம் போன டாம் கரண் .. 4 போட்டிகளில் விளையாட தடை..!
இரண்டு நாட்களுக்கு முன்பு துபாயில் நடந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 1.5 கோடிக்கு டாம் கரணை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் லீக் தொடரான பிக்பாஷ் லீக்கில் விளையாடி வரும் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்ததற்காக நடுவருடன் சண்டை போட்டதால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த டிசம்பர் 11 அன்று ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்தார். அப்போது நடுவர் ஆடுகளத்தில் ஓட வேண்டாம் என அறிவுறுத்தியும் அவரின் பேச்சை கேட்காததால் கரண் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் டாம் கரன் பிக் பாஷ் லீக்கில் அடுத்த நான்கு போட்டிகளில் விளையாடமாட்டார். அதன்படி நாளை (டிசம்பர் 22) அடிலெய்டுக்கு எதிரான ஆட்டத்திலும், டிசம்பர் 26 மெல்போர்ன் ஸ்டார்ஸ், டிசம்பர் 30 சிட்னி தண்டர், மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் டாம் கரன் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் கேப்டனும், அணி பயிற்சியாளரும் மட்டுமே ஆடுகளத்தின் நிலையை தெரிந்து கொள்வதற்கு விளையாடும் பிட்ச்சிற்க்கு நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.