WWT20 : “இந்தியாவுக்கு இந்த அணி தான் சவாலாக இருக்கும்”! முன்னாள் இந்திய வீரர் பேட்டி!
ஆஸ்திரேலிய மகளிர் அணி உலகில் உள்ள எல்லா மைதானத்திலும் சிறப்பாகவே விளையாடுபவர்கள் என இந்திய முன்னாள் வீரர் கூறியிருக்கிறார்.
சென்னை : 2024 க்கான மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இன்றும் இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில், இந்திய அணிக்கு இன்று இரவு நியூஸிலாந்து மகளிர் அணியுடன் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த முறை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடருக்கு இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த நிலையில், இந்திய அணிக்கு அறிவுரை கூறும் வகையில் இந்திய முன்னாள் சுழற் பந்து வீச்சளரான ஹர்பாஜன் சிங் பேசி இருக்கிறார்.
சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் இந்திய மகளிர் அணி சற்று கவனமாக விளையாட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர், “இந்திய அணி தனது பிரிவில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இந்த பிரிவில் இந்திய மகளிர் அணிக்கு ஆஸ்திரேலியா அணி மட்டும் கொஞ்சம் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்த பிரிவு ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இந்திய துணை கண்டத்து மைதானங்கள் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அளவில் உகந்ததாக இருக்காது.
ஆனாலும், அவர்களை பொறுத்த வரை எங்கு விளையாடுகிறோம் என்பது ஒரு விஷயமே இல்லை. உலகின் எங்கு போட்டி நடந்தாலும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது கடினம் தான். எனவே இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா தான் கடும் சவாலாக இருக்கும்.
இலங்கை அணி சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இதனால் அவர்கள் இந்தியாவை சந்திக்கும் போது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். எனவே இந்தியா-இலங்கை ஆட்டமும் நல்ல மோதலாக இருக்கும்.
இந்தியா ஒட்டுமொத்தத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன். நமது வீராங்கனைகள் ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். நெருக்கடி எடுத்து கொள்ள வேண்டாம், ஒரே அணியாக செயல்பட வேண்டும்.
அப்படி செய்தால் முடிவு தானாக கிடைக்கும். அதிகமாக அடுத்த போட்டியை குறித்து யோசிக்காமல் அந்த ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள். இதை சரியாக செய்தால் நம் மகளிர் அணி இந்த தொடரில் ஜொலிக்கும். இது தான் அவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை”, என ஹர்பஜன் சிங் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.