இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை பெரிய தொகை கொடுத்து பஞ்சாப் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெறவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள அணிகள் குறித்த விஷயங்கள் தகவல்களாகப் பரவிக் கொண்டு இருக்கிறது.
அந்த வகையில், ஏற்கனவே அவரை பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சூழலில், அவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளது உறுதியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்ட்டை அணி ஏலத்தில் எடுக்கத் திட்டமிடுவதற்கான காரணம் குறித்த விவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்…
இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய அணியை மறு சீரமைக்க விரும்பிய காரணத்தால் நிர்வாகம் தங்கள் அணியில் இரண்டு அங்கீகரிக்கப்படாத (uncapped) வீரர்களை மட்டுமே பாதுகாத்துக்கொண்டது. எந்த வீரரையும் தக்க வைத்துக்கொள்ளாமல் 110.5 கோடி ரூபாய் வைத்துள்ளது. எனவே, ஏலத்தில் ரிஷப் பண்ட்டை பெரிய தொகை கொடுத்துக் கூட எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளராக நான்கு ஆண்டுகளுக்குக் குறைந்தபட்ச ஒப்பந்த காலத்திற்கு நியமிக்கப்பட்டால் நிச்சயமாகப் பண்டை அணி எடுக்கும்.
ஏனென்றால், இதற்கு முன்பு டெல்லி அணியில் ரிஷப் பண்ட் கேப்டனாக விளையாடியபோது ரிக்கி பாண்டிங் தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார். எனவே, இருவருக்கும் இடையே நல்ல பாண்டிங் இருந்த காரணத்தால் இருவரும் ஒரே அணியில் பணியாற்ற வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம் பண்ட் பஞ்சாப் அணியில் வந்தால் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பிங்க்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது வரை மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அணி ஜிதேஷ் சர்மாவை விடுவிக்காமல் வாய்ப்பு கொடுத்து வந்தது. ஆனால், அவர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத காரணத்தால் அவரை விடுவித்து அந்த வாய்ப்பை தொடர்ச்சியாக ரிஷப் பண்ட்க்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் ஏலத்தில் கடும் போட்டிக்கு மத்தியில் பண்டை பஞ்சாப் எடுக்குமா? அல்லது வேறு அணி தட்டி தூக்குமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.