“புத்தரின் ஞானம்,அம்பேத்கரின் நிலைத் தன்மை என்னுள் உள்ளது” – சாதி அவதூறுக்கு பதிலடி கொடுத்த வந்தனா கட்டாரியா..!

Default Image

ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா கட்டாரியா சாதி குறித்து அவதூறு பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை வந்தனா கட்டாரியா,தற்போது ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடினார்.

தகுதி:

அதன்படி, முன்னதாக நடைபெற்ற  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து கோல்கள் அடித்து,ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் என்ற பெருமையை வந்தனா பெற்றுள்ளார்.மேலும்,இப்போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

தோல்வி:

இதனையடுத்து,நடைபெற்ற ஹாக்கி அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.இதனால்,வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி மோத இருந்தது.

சாதி ரீதியாக கிண்டல்:

இந்த நிலையில்,அரையிறுதி போட்டியில் தோற்றதால் உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு,மாற்று சாதியை சேர்ந்த இரு நபர்கள் வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல்,இந்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த வந்தனாவின் குடும்பத்தினரிடம், இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரை அணியில் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களைக் கூறி திட்டிச் சென்றனர். அப்போது வந்தனாவின் குடும்பத்தாருக்கும், அந்த இரு நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர்,அந்த இரு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனையடுத்து,நடந்த சம்பவம் குறித்து வந்தனாவின் சகோதரர் போலீஸாரிடம் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களைத் தேடி வந்த நிலையில்,இருவரும் கைது செய்யப்பட்டார்கள்.அதில்,ஒருவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹாக்கி வீரரான விஜய் பால் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி,எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்,விஜய் பால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஹாக்கியில் விளையாட அனுமதிக்கப் படமாட்டார் என்று மாநில ஹாக்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பதிலடி:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தனா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”புத்தரின் ஞானமும்,அம்பேத்கரின் நிலைத் தன்மையும்,கான்ஷி ராமின் தைரியமும் என்னுள் உள்ளது.இதனால்,நான் தலித் ஆக இருப்பதில் பெருமை அடைகிறேன்.மேலும்,ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாகவும்,தைரியமாகவும் இருக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த சம்பவத்திற்கு எதிராக இணையத்தில் பலரும் கடுமையாக குரல் எழுப்பி வருகின்றனர்.

பதக்கத்திற்கான போட்டி:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில், இந்திய மகளிர் அணி பிரிட்டனை எதிர்கொண்டது.ஆட்டத்தின் 23 மற்றும் 26வது நிமிடத்தில் இந்தியா வரிசையாக இரண்டு கோல்களை போட்டது. இந்தியாவின் குர்ஜித்தான் அந்த இரண்டு கோல்களை பெனால்டி கார்னர் மூலம் போட்டு அசத்தினார்.இதனால் ஆட்டம் சமநிலையில் இருந்தது.

அப்போது ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் அனல் பறக்க ஓடி வந்த கட்டாரியா 3 வது கோல் போட்டு இந்தியா லீட் எடுக்க காரணமாக அமைந்தார். இறுதியில், பிரிட்டன் 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இருப்பினும்,ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்