செஸ் சாம்பியன் ஆக காரணமாக இருந்ததே தமிழ்நாடு அரசு நடத்திய போட்டி தான் – குகேஷ் பேச்சு!
மக்கள் தனக்கு கொடுத்த ஆதரவுக்கு மிகவும் நன்றி என உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அது மட்டுமின்றி, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்து மழையும் குவிந்தது.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக அவர் தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்கு தனியாக வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, சென்னை விமான இன்று அவருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த குகேஷ் ” பட்டத்தை வெல்ல தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஜாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் என்னுடைய பல வருட கனவு நிறைவேறியுள்ளது. மக்கள் எனக்கு கொடுத்த இந்த ஆதரவை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.” என பேசினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் தொடர் உங்களுக்கு எந்த அளவுக்கு உதவியது என்பது போல கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த குகேஷ் ” தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடர் எனது வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தது உண்மை தான். அதில் வெற்றிபெற்ற காரணத்தால் தான் என்னால் CANDIDATES தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது” எனவும் பேசிவிட்டு சென்றார்.