இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!
நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவி உள்ளது.
துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய நியூஸிலாந்து அணியின் தொடக்கத்தில் களமிறங்கிய வீராங்கனைகள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இதனால் நியூசிலாந்து மகளிர் அணியின் தொடக்கம் நன்றாகவே அமைந்தது. ஆனாலும், இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டனான டேவின் களமிறங்கினார். சரியான நேரத்தில் களமிறங்கிய அவர் தனது அதிரடியான ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினார்.
அதன் வெளிப்பாடாக நியூசிலாந்து மகளிர் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடி காட்டிய டிவைன் அரை சதம் கடந்து விளையாடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து மகளிர் அணி 160 ரன்கள் குவித்தது. அதில் அணியின் கேப்டனான டிவைன் 36 பந்துகளுக்கு 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.
இதைத் தொடர்ந்து, 161 என்ற இலக்கை எட்டுவதற்கு இந்திய மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும். இந்திய மகளிர் அணியின் நம்பிக்கையுமான ஸ்மிரிதி மந்தானா 12 ரன்கள் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
அவருடன் விளையாடிய ஷெபாலி வர்மா 2 ரன்களுக்கும், அணியின் கேப்டனான ஹர்மன் பிரீத் கவுர் 15 ரன்களும், ஜெமிமா 13 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து மேற்கொண்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினர்கள்.
இப்படி ஒரு பக்கம் சொதப்பியபோது அடுத்ததாக களமிறங்கிய வீராங்கனைகளும் நியூஸிலாந்து மகளிர் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி விக்கெட்டை இழந்தார்கள். பெரிதும் எதிர்ப்பார்க்க பட்ட ரிச்சா மற்றும் தீப்தி கூட்டணியும் இந்திய மகளிர் அணிக்கு கைகொடுக்க வில்லை.
இதனால், 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நியூஸிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
அதிலும், நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ரோஸ்மேரி மேர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மகளிர் அணி இந்த தொடரின் முதல் வெற்றியையும், இந்திய மகளிர் அணி தோல்வியுடனும் தொடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.