தங்க மகன் நீரஜ் சோப்ராவை கௌரவிக்க, இந்திய தடகள சங்கம் முக்கிய அறிவிப்பு..!
ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவை கௌரவிக்க,அவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதியை ‘ஈட்டி எறிதல் நாள்’ என்று பெயரிட இந்திய தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று நடைபெற்ற ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று, 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றார்.
இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.அதுமட்டுமல்லாமல்,டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இதனையடுத்து,நீராஜ் சோப்ராவை ஒட்டுமொத்த இந்திய மக்களும்,அரசும் பாராட்டியது.குறிப்பாக,ஹரியானா அரசு ரூ.6 கோடியும்,கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் என்று அறிவித்தது.மேலும்,பஞ்சாப் அரசு ரூ.2 கோடி,மணிப்பூர் ரூ.1 கோடி,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பிசிசிஐ தலா ரூ.1 கோடி பரிசுத் தொகையை அறிவித்தன.
இந்நிலையில்,இன்று இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) திட்டக் குழுவின் தலைவர் லலித் பானோட் ,ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ராவை கௌரவிக்க ,அவர் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதியில் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து,நீரஜ் சோப்ராவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் பானோட் என்பவர் கூறியதாவது “இந்திய தடகள சம்மேளனத்தின் திட்டக் குழு, ஈட்டி எறிதலை மேலும் ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.அதன்படி,நீரஜ் சோப்ரா டோக்கியோவில் தங்கம் வென்ற நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதியை ஈட்டி எறிதல் நாளாக பெயரிட முடிவு செய்துள்ளது.மேலும்,அதே நாளில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும்”,என்று கூறினார்
சோப்ரா 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.