“அது தான் கடைசி ஒரு நாள் தொடர்”…ஓய்வை அறிவித்த முகமது நபி!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி முடிந்த பிறகு அவர் இதனை வெளிப்படுத்தினார்.
இந்த ஒரு நாள் தொடரில் ஆப்கானிஸ்தானின் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தொடரில் முகமது நபி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். விருதை வென்ற பிறகு பேசிய முகமது நபி ” உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு நான் ஓய்வு பெறலாம் என நினைத்தேன். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வானது.
எனவே, அந்த தொடரில் நானும் விளையாடினாள் நன்றாக இருக்கும் என யோசித்தேன். எனவே, அந்த தொடரில் விளையாடி முடித்த பிறகு நான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டு இருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு நான் என்னுடைய ஓய்வை அறிவிப்பேன்” எனவும் முகமது நபி தெரிவித்தார். ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் டி20 போட்டிகளில் அவர் விளையாடுவார் எனத் தெரிகிறது.
39 வயதான முகமது நபி ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு தூணாகத் திகழ்ந்து வருகிறார் என்றே கூறலாம். 2015 இல் ஆப்கானிஸ்தானின் முதல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை விளையாடிய போது கேப்டன் முகமது நபி தான் இருந்தார். இதுவரை 147 இன்னிங்கிஸ் விளையாடி இருக்கும் முகமது நபி 3,600 ரன்கள் எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
பேட்டிங் மட்டுமின்றி, ஒரு ஆஃப் ஸ்பின்னராகவும் கலக்கி இருக்கிறார். அவர் 161 இன்னிங்கிஸ் விளையாடிய அவர் மொத்தமாக 172 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஏற்கனவே, இவர் கடந்த 2019 இல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.