ஏழ்மையும், உடல் குறையும் உடைத்தெறிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு ‘தங்க’ மங்கை.!
- சேலம் மாவட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறு வயதில் இருந்து சுபாஷினிக்கு ஜூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
- பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார் சுபாஷினி.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னதாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி. பிறவிலேயே பார்வை இல்லாததால் இவருக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுக்கும் பார்வை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கல்லூரி மாணவியாக உள்ள சுபாஷினிக்கு 7-ம் வகுப்பு முதல் ஜூடோ விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார்.
இதனிடையே சுபாஷினியின் தந்தைக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது தாய் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும், மகளின் ஜூடோ விளையாட்டு ஆசைக்கு அவர் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருந்தது இல்லை. பின்னர் எங்கு போட்டிகள் நடந்தாலும் அதில் வெற்றியை ருசிப்பார். இதன் பலனாக லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு சுபாஷினிக்கு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றார்.
பின்னர் சுபாஷினி கூறுகையில், ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என்பதே என்னோட கனவு. ஆனால் குடும்ப சூழல் அதற்கு ஏதுவாக இல்லை என கண்ணீர் விடும் அவர், தமிழக அரசு தனக்கு ஒரு வேலை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் என்கிறார். காமன்வெல்த்தில் தங்கம் வென்ற சுபாஷினிக்கு ஒலிம்பிக் கனவு கைகூடுமா? அவருக்கு அரசு தரப்பில் இருந்து உதவிகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.