அமர்களப்படுத்திய தென்னாபிரிக்க மகளிர் அணி! தொடரின் 2-வது வெற்றியைப் பதிவு செய்து அசத்தல்!
நடைபெற்ற டி20 மகளிர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் வீராங்கனையான மரிசான் கேப் 43 ரன்கள் எடுத்து அணிக்குத் தேவையான விளையாட்டை வெளிப்படுத்தினார்.
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 11-வது போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி தங்களது தொடக்கத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்தனர். ஸ்காட்லாந்து அணியின் பவுலர்களை திணறடித்து ரன்களைச் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை எடுப்பதில் மட்டும் கோட்டை விடாமல் கவனமாக இருந்தனர்.
இதனால் 20 ஓவரும் பேட்டிங் பிடித்த தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிலும் மரிசான் கேப் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் இருவரும் 43 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் 40 ரன்கள் எடுத்திருந்தார்.
ஸ்காட்லாந்து அணியைப் பொறுத்த வரையில் ரேச்சல் ஸ்லேட்டர், கேத்ரின் பிரைஸ், ஒலிவியா பெல், கேத்ரின் ஃப்ரேசர், டார்சி கார்ட்டர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதன் பின் 167 என்ற இமாலய இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது.
தென்னாப்ரிக்க அணியின் வலுவான பவுலிங்கிற்கு ஸ்காட்லாந்து அணி பேட்ஸ்மேன்களால் தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து மோசமாக தடுமாறி விளையாடி வந்தது. அதன்படி, வெறும் 10 ஓவர்களில் 50 ரன்கள் மட்டும் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து மிகமோசமான நிலைமையில் தத்தளித்தது.
அதனைத் தொடர்ந்தும், ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க முடியாமல் தடுமாறியது. இதனால், 17.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென்னாப்பிரிக்கா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ஸ்காட்லாந்து அணியைப் பொறுத்த வரையில் கேத்ரீன் ஃபிரேசர் 14 ரன்கள் எடுத்திருந்தார். தென்னாபிரிக்க அணியில் நோன்குலுலேகோ மியாபா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றியைப் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. அதே போல இந்த தொடரில் தொடர்ந்து 3 தோல்விகளை பெற்று ஸ்காட்லாந்து மகளிர் அணி முதல் அணியாக இந்த தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது.