சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 கோப்பையின் 3-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினார்கள்.
துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும், தென்னாபிரிக்கா மகளிர் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸ்க்கு களமிறங்கினர்கள்.
தொடக்கத்தை சிறப்பாக அமைக்க தவறிய தொடக்க வீராங்கனைகளால் ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்தது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய எஸ்.டெய்லர் தனது அணிக்கு தேவையான நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி சற்று ரன்களை ஸ்கோர் போர்டில் சேர்த்து. ஆனால், அப்போதும் ஒரு சிக்கலை வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி சந்தித்தது.
ஒரு பக்கம் நன்குற விளையாட்டை டெய்லர் விளையாடி வந்தாலும், அவருடன் எந்த ஒரு வீராணங்கனையும் சிறப்பான பார்ட்னெர்ஷிப்பை அமைக்க முடியாமல் தவறினார்கள். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி குறைவான ரன்களையே சேர்த்தது.
அதன்படி, 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாபிரிக்கா மகளிர் அணியின் சிறப்பாக பந்து வீசிய நோன்குலுலேகோ ம்லபா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரள வைத்தார்.
அதே போல வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் நிதான ஆட்டத்தை சிறப்பாக விளையாடிய டெய்லர் 41 பந்துக்கு 44 ரன்கள் எடுத்திருந்தார். இதனால், எளிய இலக்கான 119 ரன்களை எடுப்பதற்கு தென்னாபிரிக்க மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. அதைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தென்னாபிரிக்கா தொடக்க வீரர்கள் சரியான திட்டத்துடன் களமிறங்கி இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பந்து வீச்சை அடிக்க முற்படாமல், தேவையான நேரத்தில் பவுண்டரி விளாசியத்துடன், இரு பேட்ஸ்மேன்களும் தட்டி தட்டி, ஒன்று இரண்டு என ஓடியே ரன்களை சேர்க்கத் தொடங்கினர். ஆட்டம் பவர் பிளே தாண்டி போனதும் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளுக்கு எதிரணி சவாலாக மாறியது.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும் பல யுக்திகளை கையாண்டும் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. களமிறங்கிய இரு வீராங்கனைகளும் அரை சதம் அடித்து, இறுதி வரை நின்று விளையாடி கொடுத்து தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றியைத் தேடி தந்தனர்.
நிதானமாக விளையாடிய இருவரும் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடினார்கள், இதனால் 17.5 ஓவர்களில் தென்னாபிரிக்க மகளிர் அணி 119 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. சிறப்பாக விளையாடிய லாரா வால்வார்ட் 59 ரன்களும் , டாஸ்மின் பிரிட்ஸ் 57 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா மகளிர் அணி நடைபெற்று வரும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அமர்களப்படுத்தி இருக்கிறது.