சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த சௌமியா சர்கார்..!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது.
இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச கிரிக்கெட் வீரர் சௌமியா சர்கார் முறியடித்தார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்கள் எடுத்தார்.
கடந்த 2009-ல் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 163* ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கடந்த 14 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை ஆசிய அணியில் உள்ள வேறு எந்த பேட்ஸ்மேனும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று சௌமியா சர்கார் 169 ரன்கள் எடுத்து முறியடித்தார்.
நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் 151 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 169 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 57 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 46.2 ஓவரில் 296 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை பறிகொடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நியூசிலாந்து அணியில் வில் யங் 89 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்களும், தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 45 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார்.
சௌமியா சர்கார் தனது சிறப்பான ஆட்டத்திற்காக ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது பெற்றார். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.