ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் : இரட்டை தங்கம் வென்ற இந்திய வீரர் ராகேஷ் மானே!
தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் ராகேஷ் மானே வெற்றிப் பெற்று அசத்தியுள்ளார்.
லிமா : ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியானது பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த பார்த் ராகேஷ் மானே, அஜய் மாலிக், அபினவ் ஷா ஆகியோர் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இந்த போட்டியின், (தனி மற்றும் அணியின்) 2 பிரிவுகளுக்கான இறுதி சுற்றானது நடைபெற்றது. இதில், 16 வயதான இந்திய வீரர் பார்த் ராகேஷ் மானே 250.7 புள்ளிகள் குவித்து முன்னிலை பெற்றார். இதனால், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
அவருடன் போட்டியிட்ட சக போட்டியாளரான சீன வீரரான லிவான்லின் 250 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவைச் சேர்ந்த வீரரான பிராடென் 229.1 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மேலும், அணிகளுக்கான பிரிவில் நடைப்பெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி சார்பாக விளையாடிய பார்த் ராகேஷ் மானே, அஜய் மாலிக், அபினவ் ஷா ஆகியோர் 1883.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர். இதில், தனிநபர் மற்றும் அணிகள் என இரண்டிலும் இளம் வீரரான பார்த் ராகேஷ் மானே இரட்டை தங்கப் பதக்கத்தை வென்று அசத்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.