போராடி தோல்வியடைந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி! வங்கதேச மகளிர் அணிக்கு முதல் வெற்றி!
கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது முதல் போட்டியுடன் உற்சாகமாக தொடங்கி இருக்கிறது.
ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதினார்கள்.
இதில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய வங்கதேச அணிக்கு நல்லதொரு தொடக்கம் அமையவில்லை. இதனால், தட்டி தட்டியே அந்த அணியால் ரன்களை சேர்க்க முடிந்தது. அதிலும், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சோபனா மோஸ்தரி மறுமுனையில் மெதுவாகவே ரன்கள் சேர்த்தார்.
மேலும், ஸ்காட்லாந்து மகளிர் அணியின் பவுலர்கள் பந்து வீச்சில் திணறிய வங்கதேச மகளிர் அணியால் அதிக பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. இதனால், 20 ஓவர்களும் முழுமையாக பேட்டிங் செய்த வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட்டுகள் இழந்து வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில், வங்கதேச மகளிர் அணியில் சோபனா மோஸ்தரி மட்டும் 36 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரம் ஸ்காட்லாந்து மகளிர் அணியில் சிறப்பாக பந்து வீசிய சாஸ்கியா ஹார்லி 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி இருந்தார். இதன் மூலம், ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு 120 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி பந்துக்கு நிகரான ரன்கள் இருப்பதால் பவுண்டரி அடிக்க ரிஸ்க் எடுக்காமல், ஓடி ஓடியே ரன்களைச் சேர்த்தனர். இதனால், தேவையான நேரத்தில் பவுண்டரி அடிக்கத் தவறியதால் ஸ்காட்லாந்து அணி சிரமத்திற்கு தள்ளப்பட்டது.
மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மற்றொரு முனையில் சாரா ப்ரைஸ் நிலைத்து விளையாடினர். ஆனாலும், ஸ்காட்லாந்து அணியால் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. குறிப்பாக அவருடன் அணியில் வேறு எந்த வீராங்கனையும் விளையாடாததால் ஸ்காட்லாந்து மகளிர் அணி தோல்வியைத் தழுவியது.
இறுதியில், 20 ஓவர்கள் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து வெறும் 103 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணி வெற்றிப் பெற்றது. அதிலும், வங்கதேச அணியில் சிறப்பாக பந்து வீசிய ரித்து மோனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் வங்கதேச மகளிர் அணி, இந்த 2024 ஆண்டின் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.