“ரொம்ப சுமாரா இருக்கு”…ஸ்மிருதி மந்தனாவுக்கு அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரகளின் பேட்டிங் சுமாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
துபாய் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சரியான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை, இரண்டு போட்டிகள் இந்த தொடரில் விளையாடி இருக்கும் அவர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் இருப்பதால் பழையபடி பார்முக்கு திரும்பவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
இவர்களுடைய அதிரடியான கம்பேக் எந்த ஆட்டத்தில் வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள். ரசிகர்களைப் போலவே, தானும் காத்திருப்பதாகவும், அவர்களுடைய பேட்டிங் பார்ம் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” வழக்கமாக இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் ஷஃபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பேட்டிங் மிகவும் சுமாராக இருக்கிறது. அதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருப்பது போல நானும் ஏமாற்றத்துடன் தான் இருக்கிறேன். அவர்களுக்கு பந்து பேட்டில் படாததற்கு முக்கிய காரணமே மைதானத்தின் பிச் தான் காரணம்.
துபாய் பிச் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் தான் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் இருக்கிறது. இந்த மைதானத்தில் பந்து அந்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாது. ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவருமே வேகமாக பவுன்சர் பந்துகளை எதிர்கொண்டு விளையாட கூடியவர்கள். அதிலும், ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாட கூடியவர்.
நான் தனிப்பட்ட முறையில் ஸ்மிருதி மந்தனாவுக்கு அட்வைஸ் ஒன்றை கொடுக்க விரும்புகிறேன். ‘ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாட ஆரம்பித்தால், மற்றோரு பக்கம் ஸ்மிருதி மந்தனா கொஞ்சம் பொறுமையாக 6 ஓவர்கள் வரை சிக்ஸர், பவுண்டரிகள் அடிக்க நினைக்காமல் மெதுவாக ரன்களை சேர்க்க முயற்சி செய்யவேண்டும்.
அப்படி விளையாடினாள் ஒரு பக்கம் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடி முடித்த பிறகு நீங்கள் உங்களுடயை அதிரடியான ஆட்டத்தை தொடரவேண்டும்’ என அட்வைஸ் கொடுத்தார். தொடர்ந்து பேசிய அவர் “கண்டிப்பாக வரும் போட்டிகளில் அவர்கள் பிச் தன்மையை புரிந்து கொண்டு விளையாடுவார்கள்” என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.