விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இல் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் இங்கிலாந்து மாஸ்டர்ஸை எளிதாக தோற்கடித்துள்ளது.

சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அம்ப்ரோஸ் 23, டேரன் மேடி 25 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் தவால் குல்கர்னி சிறப்பாக பந்து வீசி 3/21 விக்கெட்டுகளையும், அபிமன்யு மிதுன் மற்றும் பவன் நேகி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வினய் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி. பின்னர், விளையாடிய இந்தியா மாஸ்டர்ஸ் அணி, 11.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குர்கீரத் சிங் 63, சச்சின் 34, யுவராஜ் 27 ரன்கள் எடுத்தனர்.
இந்த போட்டி சச்சின் டெண்டுல்கரின் விண்டேஜ் டச் மூலம் சுரவாரஸ்யமாக இருந்தது. அவர் 21 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்தார். மேலும், குர்கீரத் சிங் மான் உடன் இணைந்து 7 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்த தொடக்க பார்ட்னர்ஷிப் மூலம் போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர். குர்கீரத் சிங் சச்சினுடன் ஆக்ரோஷமாக விளையாடியதில் 35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தனர். இது தவிர, யுவராஜ் சிங்கும் 14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் போது, யுவராஜ் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடித்தார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இல் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன, அதில், இந்தியா மாஸ்டர்ஸ் தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.