ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் இல்லை.! வேறு யார் தெரியுமா.?
கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர்.
ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான பெலிண்டா கிளார்க். இவர் 1997 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 16ம் தேதி) நடந்த ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் போது டென்மார்க் அணிக்கு எதிராக விளையாடினார்.
10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!
அந்த போட்டியில் 155 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 229* ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் நபர் என்ற சாதனையை ஐசிசி ஹால் ஆஃப் பேமர் பெலிண்டா கிளார்க் படைத்தார். அடுத்த 13 ஆண்டுகளுக்கு இந்த சாதனையின் ஒரே உரிமையாளராக இருந்தவர் பெலிண்டா கிளார்க் மட்டுமே. இதன் பிறகே சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை எட்டினார்.
சச்சின் டெண்டுல்கர் 2010 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் ஆண் கிரிக்கெட் வீரர் ஆவார். பிப்ரவரி 2010 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 200* ரன்கள் எடுத்தார். மேலும், பெலிண்டா கிளார்க் இந்த ஒரு சாதனை படைத்தவர் மட்டுமல்ல. அவர் 1994ம் ஆண்டு ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டனாக மாறினார். அவரது தலைமையின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.