தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரூபா குருநாத்..!
இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் 70 வயத்திற்கு மேல் பதவியில் இருக்க கூடாது. தொடர்ந்து இரண்டு முறை பதவியில் இருந்தால் பின்னர் ஒரு வருடம் இடைவெளிக்குப் பின்னர் பதவிக்கு வர வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு பதவியில் இருக்க கூடாது போன்ற பல விதிமுறைகளை லோதா கமிட்டி பரிந்துரை செய்தது.
அதன்படி மாநிலம் கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 23ம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடக்க உள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநில கிரிக்கெட் சங்கமும் தேர்தல் நடத்தி வருகிறது. சில மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில் இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் தேர்வு செய்வதற்காக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்றுநடந்தது.
இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் மகள் ரூபா குருநாத் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.