ரொனால்டோவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை.! 42 லட்சரூபாய் அபராதம்.! முழு விவரம் இதோ..
ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகரின் போனை கீழே தள்ளிவிட்டதற்காக, கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50,000 யூரோ(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஒழுங்கற்ற முறையில் ஈடுபட்டதாகக்கூறி மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் முடித்துள்ளது. ஏப்ரல் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் எப்.சி(FC) மற்றும் எவர்ட்டன் எப்.சி(FC) அணிகளுக்கிடையேயான போட்டி முடிந்து ரொனால்டோ செல்லும்போது, தன்னை படம்பிடிக்க முயன்ற ரசிகர் ஒருவரது போனை கீழே தள்ளி விட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு ரொனால்டோ இது குறித்து வருத்தம் தெரிவித்து சமூக ஊடகத்தில் மன்னிப்பும் கேட்டார். இதற்காக ரொனால்டோவுக்கு, கால்பந்து கூட்டமைப்பு இந்த அபராதம் மற்றும் தடை விதித்துள்ளது. ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக எந்த கிளப் அணியில் இணைகிறாரோ அங்கு அவர் விளையாடும் இரண்டு உள்ளூர் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில், இன்று (நவ-24) போர்ச்சுகல் மற்றும் கானா அணிகள் இரவு 9:30 க்கு மோதுகின்றன. இந்த போட்டிக்கு தயாராகி வரும் ரொனால்டோ, சம்பவம் குறித்து மெர்சிசைட் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.