“கேப்டனிடமிருந்து சுதந்திரம் தேவை”..ரோஹித் சர்மா கொடுக்கிறாரா? முகமது ஷமி பேச்சு!
கேப்டனாக, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எந்த வீரர் சிறப்பாக விளையாடுவார் என்பது ரோஹித் சர்மாவுக்கு தெரியும் என முகமது ஷமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடைந்து தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று வருகிறார்.
அடுத்ததாக இந்தியா ஆஸ்ரேலியாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியில் அணிக்கு முகமது ஷமி திரும்பவுள்ளார். இந்த சூழலில், மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பி வரும் அவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்து அதில் பல விஷயங்களைப் பேசியுள்ளார். குறிப்பாக, ரோஹித்தின் கீழ் விளையாடிய அனுபவத்தைப் பற்றிப் பேசினார்.
இது குறித்து அவர் பேசியதாவது ” ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடியதற்கு முன்பு தான் நான் அவருடன் அதிகமாக விளையாடி இருக்கிறேன். அவர் கேப்டன் ஆன பிறகு அதிகமாக நான் அவருடைய தலைமையின் கீழ் விளையாடியது இல்லை. ஆனால், குறைவான போட்டிகளில் அவருடைய கேப்டன்சியில் விளையாடினாள் கூட அவரை பற்றி சில விஷயங்களை நான் புரிந்து வைத்து இருக்கிறேன்.
அது என்னவென்றால், அவர் எந்தெந்த சூழ்நிலையில், எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்தினால் சரியாக இருக்கும் என்பதை நன்றாகப் புரிந்து வைத்தவர். கேப்டனாக இருக்கிறோம் என்றால் அது நிறையவே முக்கியமான விஷயம். ரோஹித் சர்மாவிடம் அது நன்றாகவே இருக்கிறது. அவருடைய கேப்டன்சியில் விளையாடியபோது எனக்கு நிறையச் சுதந்திரங்கள் கிடைத்தது.
ஒரு அணியில் பந்துவீச்சாளர்கள் விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். அதனை அணி கேப்டனாக இருப்பவர்கள் கொடுக்கவேண்டும். அந்த சுதந்திரம் ரோஹித் சர்மா கேப்டன்சியில் கிடைக்கிறதா? என்று கேட்டல் நிச்சயமாகக் கிடைக்கிறது” எனவும் முகமது ஷமி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், என்னைப்பொறுத்தவரை அவர் கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக விளையாடினார் என்றால் இப்போது விளையாடிக்கொண்டு இருப்பதை விட இன்றுமே சிறப்பாக விளையாடுவார்” எனவும் பல ரசிகர்களுடைய மனதில் இருக்கும் விஷயத்தை முகமது ஷமி பேசியுள்ளார்.