கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!
இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் தனது கணக்கை தொடங்கியுள்ளது.
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. முன்னதாக நியூஸிலாந்து மகளிர் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்திருக்கும்.
இதனால், இந்த போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் இந்திய மகளிர் அணி முனைப்புடன் இந்த போட்டியில் களமிறங்கியது. இருவருக்கும் இடையே நடந்த இந்த போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, பேட்டிங் விளையாட களமிறங்கியது. தொடக்கம் முதலே இந்திய மகளிர் அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகளை இந்திய மகளிர் அணியிடம் பறிகொடுத்தனர்.
எந்த ஒரு வீராங்கனையும் நிதானமாக விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களும் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக நீத்தா டர் 28 ரன்களும், அவரைத் தொடர்ந்து தொடக்க வீராங்கனையான முனிஃபா அலி 17 ரன்களும் எடுத்திருந்தனர். அதேபோல சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணியில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டும், ஷ்ரேயன்கா படில் 2 விக்கெட்களும், ரேணுகா சிங், தீப்தி ஷர்மா மற்றும் ஆஷா ஷோபனா தலா 1 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர்.
இதனால் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என இந்திய மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரரும் நட்சத்திர வீராங்கனைமான ஸ்ம்ருதி மந்தானா 16 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் எடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து களத்திலிருந்த ஷெஃபாலி வர்மா தட்டி தட்டி ரன்களை சேர்த்தார். ஆனால், அவரும் துரதிஷ்டவசமாக 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் ஜெமிமாவும், இந்திய மகளிர் அணியின் கேப்டனுமான ஹர்மன் பிரீத் கவுரும் இணைந்து ரன்களை எடுக்க தொடங்கினார்கள். அவசரப்படாமல், மிக நிதானமாக இருவரும் ஓடி ஓடி ரன்களைச் சேர்த்தனர்.
இருப்பினும், ஜெமிமா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த ரிச்சா கோஷ் 0 ரன்களுக்கு வெளியேறினார். இதனால், இந்திய அணிக்கு அழுத்தம் வர தொடங்கியது.
ஆனாலும், களத்தில் இருந்த கேப்டன் ஹர்மன் பிரீத் மெதுவாக ரன்களை எடுக்கதொடங்கினார். ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட 23 ரன்களில் ரீடைர்ட் ஹர்ட் மூலம் அவர் வெளியேறினார்.
அதன்பின், வெற்றியின் நுனியில் இருந்த இந்திய மகளிர் அணியை களத்தில் இருந்த தீப்தி சர்மாவும், சஜனாவும் வெற்றி பெற செய்தனர். இதனால், 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்றது.
ஹர்மன் ப்ரீத்தின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தேவையான வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.