தோனி கூட விளையாடியது அதிர்ஷ்டம்! ஆதரவை பார்த்து வியந்த ரஷீத் கான்!
MS Dhoni : தோனி மைதானத்திற்குள் நுழையும் போது அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
சென்னை கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவர் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய நுழைந்தாலே சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் மைதானத்திலும் அவருக்கான ஆதரவு பெரிய அளவில் கிடைக்கும்.
அவர் பேட்டிங் செய்ய கடைசி சில ஓவர்களில் வந்தால் கூட தோனி…தோனி என ரசிகர்கள் கரகோஷம் மீட தொடங்கிவிடுவார்கள். அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து மற்ற கிரிக்கெட் வீரர்கள் கூட ஆச்சரியம் படுவது உண்டு. அப்படி தான் குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை வீரர் தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த ஆதரவை பார்த்து குஜராத் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆச்சரியம் அடைந்து போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசியுள்ளார்.
போட்டி முடிந்த பின் ரஷீத் கான் பேசியதாவது ” நான் தோனிக்கு எதிராக பந்துவீசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை போல ஒரு ஜாம்பவான் உடன் விளையாடியதை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை அவருடன் விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக தான் நினைக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை மைதானத்திற்குள் நுழையும் போதே அவருக்கு வேறுவிதமான வரவேற்பும் அபாரமான அன்பும் கிடைக்கிறது.
குறிப்பிட்ட இடங்களில் மட்டுமில்லாமல் அவர் உலகின் எந்த இடத்தில் ஆடினாலும் அவருக்கு இதே அன்பு கிடைப்பதுதான் சிறப்பான விஷயம்” என ரஷீத் கான் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்ததாக 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக குஜராத் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.