டோக்கியோ ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து வெற்றி..!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் பிரிவின் முதல் சுற்றில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கி,நேற்று முதல் பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியா பங்கேற்பு:
அதன்படி,மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.இதனால், ஒலிம்பிக்கில் இந்தியா முதல் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.மேலும், துப்பாக்கி சுடுதல் போட்டியில், சவுரப் சவுத்ரி மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், ஆனால்,அவர் 10 மீ ஏர் பிஸ்டலில் 7 வது இடத்தைப் பிடித்ததால் பதக்கத்தை இழந்தார்.
டேபிள் டென்னிஸில், மகளிர் ஒற்றையர் பிரிவில், மாணிக்க பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி இருவரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.டென்னிஸில் சுமித் நாகல் இந்தியாவுக்காக முதல் ஒற்றையர் வெற்றியைப் பதிவு செய்தார்.மேலும்,ஹாக்கியில்,ஆண்கள் அணி வென்றது,ஆனால்,மகளிர் அணி,நெதர்லாந்து அணியிடம் தோல்வியுற்றது.
பேட்மிண்டன் ஆண்கள் போட்டி:
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத்,இஸ்ரேல் வீரர் மிஷா ஜில்பர்மேனை எதிர்த்து விளையாடி 17-21, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரன்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி ஆகியோர் சீன தைப்பேவைச் சேர்ந்த வீரர்களை எதிர்த்து விளையாடி 21-16, 16-21, 27-25 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.
பேட்மிண்டன் மகளிர் போட்டி:
இந்நிலையில்,பேட்மிண்டன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை முதல் சுற்றில் எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து,முதல் செட்டை 21-7 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-10 என்ற கணக்கிலும் வெறும் 28 நிமிடங்களில் வென்று போலிகர்போவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
PV Sindhu has arrived! ????
She eases past Ksenia Polikarpova 21-7, 21-10 in her #Tokyo2020 #badminton opener ????#BestOfTokyo | #StrongerTogether | #UnitedByEmotion | #IND @Pvsindhu1 pic.twitter.com/ym4oAH5kAx
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 25, 2021