உலக செஸ் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா! அசத்தலாக படைத்த சாதனை?
உலக கோப்பை செஸ் தொடர் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இந்த அரை இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னை சேர்ந்த பிரக்ஞானந்தா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் பேபியோனா கருணாவுடன் மோதினார். இந்த நிலையில், முதல் ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் 78-வது காய் நகர்தலில் டிரா செய்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அரை இறுதி சுற்றின் 2-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா 47-வது காய் நகர்தலுக்கு பின் இந்த ஆட்டமும் டிரா ஆனது. இதனையடுத்து, டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது.
இந்த டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார். இதில், கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இந்த இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.
இறுதிப் போட்டிக்கு இரண்டாவது இந்திய வீரர்:
பிரக்ஞானந்தா உலக கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டியில் வெற்றிபெற்றால் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு, செஸ் உலகக் கோப்பையை வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெறுவார்.
செஸ் கிராண்ட்மாஸ்டர்:
விஸ்வநாதன் ஆனந்த் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவர். இவர் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்த, 1987ம் ஆண்டு உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்பிறகு 1988 இல் இந்தியாவிலிருந்து முதல் ‘கிராண்ட்மாஸ்டர்’ ஆனார். இதன்பிறகு பல தோல்விகளை சந்தித்த அவர், 2000ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.
பிறகு, 2003ல் உலகின் அதிவேக செஸ் வீரர் என்றப்பட்டதை வென்ற இவர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அதன்பிறகு, 2008ம் ஆண்டு ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.
5 முறை உலக சாம்பியன்:
2010ம் ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற போட்டியில் வேஸலின் டோபாலோவை வீழ்த்தி, நான்காவது சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், 2012ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில், இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்ட்டை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனைப் படைத்தார். தற்பொழுது வரை 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை விஸ்வநாதன் ஆனந்தையே சாரும்.
மேலும், நாக் அவுட் சிஸ்டம், ரவுண்ட் ராபின் சிஸ்டம் மற்றும் மேட்ச் சிஸ்டம் என மூன்று வெவ்வேறு வடிவங்களில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற ஒரே வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே ஆவார். ஆனால், 2013ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், விஸ்வநாதன் ஆனந்தை நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் வென்று, உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தைத் தட்டி சென்றார்.
இந்நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் உலக கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி சென்னையைச் சேர்ந்த பிரஞானந்தா விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா முன்னாள் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.