உலகக்கோப்பை டி-20 போட்டிகள் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகக்கோப்பை டி-20 தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்பொழுது இதுவும் நடப்பதற்கு வாய்ப்புகள் கம்மிதான். ஏனெனில், 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் வரவேண்டும். அதுமட்டுமின்றி, அந்தந்த நாடுகளின் அரசு மற்றும் ஆஸ்திரேலியா அரசும் அனுமதி வழங்கவேண்டும்.
மேலும், டி-20 போட்டிகள் தள்ளிவைப்பது குறித்து முடிவுகளை மே 28 ஆம் தேதி ஐசிசி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஆலோசனைக்கு பின்னர் அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுகுறித்து ஐசிசி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.