கோ கோ உலக கோப்பைகளை வென்ற இந்தியா அணிகள்! பிரதமர் மோடி பாராட்டு! 

நேற்று நடைபெற்ற கோ கோ உலக கோப்பை இறுதி போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் கோப்பையை வென்றுள்ளதை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

Kho Kho Worldcup 2025 champions - India mens team and India Women team

டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19) நிறைவடைந்தன. டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெற்றன. இந்த இரு பிரிவுகளிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோகோ ஆடவர் பிரிவில், கேப்டன் பிரதிக் வைகர் தலைமையிலான இந்திய கோகோ அணி நேபாள அணியை இறுதி போட்டியில் எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி இறுதியில் 54 – 36 என்ற புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி ‘கோகோ உலககோப்பை 2025’ எனும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதே போல, மகளிர் பிரிவில் கேப்டன் பிரியங்கா இங்லே தலைமையிலான இந்திய அணி, ஆடவர் அணி போலவே நேபாள அணியை எதிர்கொண்டது.  ஆட்டம் தொடக்கம் முதலே ஆதிக்கம் படைத்த இந்திய அணி இறுதியில் 78 – 40 எனும் புள்ளிகள் அடிப்படையில் அபார வெற்றி பெற்று ‘கோகோ உலக கோப்பை 2025’ எனும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதன் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் உலக கோப்பையை வென்ற இந்திய கோகோ அணிகளுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

இந்திய கோகோவுக்கு இன்று ஒரு சிறந்த நாள். கோ கோ உலகக் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய ஆடவர் கோகோ அணிக்கு பெருமை. அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. இந்த வெற்றி இளைஞர்களிடையே கோ கோவை மேலும் பிரபலப்படுத்த உதவும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பிரதமர் மோடி குறிப்பிடுகையில், ” முதல்முறையாக கோ கோ உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள்! இந்த வரலாற்று வெற்றி அவர்களின் ஒப்பற்ற திறமை, உறுதிப்பாடு மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் விளைவாக கிடைத்துள்ளது.

இந்த வெற்றி இந்தியாவின் பழமையான பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றிற்கு அதிக வெளிச்சத்தை (பிரபலம்) கொண்டு வந்துள்ளது, இது நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. இந்த சாதனை, வரும் காலங்களில் மேலும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டை தொடர வழி வகுக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்